சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பேரவையில் காரசார விவாதம் ஏற்பட்டது. நூறு நாட்கள் போராட்டம் நடந்த போது தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அப்போதைய முதல்வர் ஏன் அழைத்துப் பேசவில்லை என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு, 144 தடை உத்தரவு போடப்பட்ட பிறகும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தடையை மீறி நடந்த போராட்டத்தில் திமுக எம்எல்ஏ பங்கேற்றதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது குறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 'காக்கை குருவிகளை சுடுவது போல் காவலர்கள் சுட்டுள்ளார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பொள்ளாச்சி, கோடநாடு விவகாரங்களில் திமுக ஆட்சி அமைந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு ஆட்சி நடைபெறும் பொழுதும் ஒவ்வொரு தவறுகள் நடைபெறும்தான். ஆனால் நடைபெறுகின்ற நேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் ஆட்சி இந்த ஆட்சி. பொள்ளாச்சி வழக்கு என்ன ஆச்சு? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். நாங்கள் வந்து தான் இப்பொழுது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். கோடநாடு என்ன ஆச்சு? அதற்கும் நாங்கள் தான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்'' என்றார்.