முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மோடி ஆட்சியின் பேரழிவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார மேலாண்மையின்மை போன்ற குறைபாடுகளில் இந்தியா சிக்கித் தவிக்கிறது என விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இன்று கர்நாடகாவில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோடியின் ஆட்சியில்தான் வங்கி மோசடி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். 2013ஆம் ஆண்டில் ரூ.28 ஆயிரத்து 416 கோடியாக இருந்த வங்கி மோசடி வெறும் நான்கு ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரமாக அதிகரித்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ‘நம் நாடு மிகமோசமான பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை. பொருளாதாரம் தகுந்த அளவிற்கு வளர்ச்சியைச் சந்திக்கவில்லை. இதற்கெல்லாம், மோடியின் பேரழிவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார மேலாண்மையின்மை போன்றவைதான் காரணம்’ எனக் குற்றம்சாட்டிய அவர், இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும் என்பதுதான் துரதிர்ஷ்டவசமான உண்மை எனவும் குறிப்பிட்டார்.