
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (07.05.2025) நள்ளிரவு 1 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் உள்பட முப்படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து டெல்லியில் மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ எதிர்ப்பு முன்னணி (TRF - The Resistance Front) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழு பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்தக் குழு ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாதக் குழுவான லஷ்கர் - இ - தொய்பாவின் ஒரு முன்னணியாகும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், பாகிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் பயங்கரவாதிகளின் தொடர்பு இருப்பது குறித்த குறிப்புகள் வெளிவந்துள்ளன” எனப் பேசினார்.
மேலும் ராணுவ கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் எந்த இராணுவ நிலையையும் குறிவைக்கவில்லை. மேலும் இதுவரை பாகிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை. பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத தளமான சுபன் அல்லா, ஜெய்ஷ் - இ- முகமதுவின் தலைமையகம், இந்திய ஆயுதப் படைகளால் குறிவைக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக, இந்திய ஆயுதப் படைகளால் முறையே 9 கி.மீ. மற்றும் 13 கி.மீ. தொலைவில் உள்ள மர்காஸ் அஹ்லே ஹதீத், பர்னாலா மற்றும் மர்காஸ் அப்பாஸ், கோட்லி ஆகிய இடங்கள் குறிவைக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகிறார், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. பொதுமக்கள் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதையும், பொதுமக்கள் உயிர் இழப்பதையும் தவிர்க்கும் வகையில் இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன” எனப் பேசினார். அப்போது ஆபரேஷன் சிந்தூரின் போது, அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களான முந்திரிக் மற்றும் பாகிஸ்தான் மற்றும் போஜ்புக் காஷ்மீர் பகுதியில் உள்ள பிற பயங்கரவாத முகாம்கள் குறித்த பல வெற்றிகளைக் காட்டும் காணொளிகளை வெளியிட்டார். இதில் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி பயிற்சி பெற்ற முரிட்கேவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.