தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று (04.03.2021) விசிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தான நிலையில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக தரப்பில் காங்கிரசுக்கு அதிகபட்சமாக 22 இடங்கள்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக்கூட்டத்தில், திமுக தர முன்வரும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதைக் குறிப்பிட்டு பேசியபோது கே.எஸ்.அழகிரி கண் கலங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
''நாம் 15 வருடமாக திமுக கூட்டணியில் உள்ளோம். 100 தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கிறது. எனவே கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை அவர்களே தருவார்கள் என எதிர்பார்த்தோம். தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதைவிட நம்மை நடத்திய விதம்'' எனக் கூறுகையில் கண் கலங்கிய கே.எஸ்.அழகிரி, கண் கண்ணாடியை கழற்றி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு ''இனி நான் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன். நீங்களே சென்று பேசி தொகுதிப் பங்கீடு செய்து வாருங்கள், நான் இறுதியாக கையெழுத்திட வருகிறேன்'' என நிர்வாகிகளிடம் பேசியதாக தகவல்கள் வெளியகியுள்ளன.