




அதிமுக சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று (21.03.2025) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், “பதவிக்காகவோ, புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அண்ணாவின் கொள்கையால் கடைப்பிடிக்கப்பட்டு மக்களுக்கு தொண்டாற்ற அரசியலுக்கு வந்த தொண்டன் நான். எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும், நிலைப்பாடும் கிடையாது.
சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழனாக, இந்தியனாக ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என இயல்பாகவே வாழ்ந்து வரும் நான் எல்லாருக்கும் சமநீதியும், சம பாதுகாப்பும், சம உரிமையும் கிடைக்க வேண்டும் என உளமாற நினைப்பவன் நான். எண்ணிக்கையில் குறைவாக உள்ள சிறுபான்மையினரை பாதுகாத்து அரவனைத்து அன்பு செய்வதை தலையாய கடமையாக கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நான் என்றைக்கு உங்களுக்கு துனையாக இருப்பேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம், ஆனால் நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை. மக்களின் பன்முகத்தன்மையை முழுமையாக ஏற்கும் இயக்கம் அதிமுக. முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, எம்ஜிஆர் வழியில் நான் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன். உள்ளத்தில் தூய்மையும் செயலில் நேர்மையும் உள்ளவர்களுக்கு ஆண்டவனே கூட்டணி அமைத்து வெற்றியை தேடித்தருவான் என்று மகத்தான உன்மை நபிகள் நாயகம் - அபுபக்கர் இடையேயான நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இது போன்ற முன்மாதிரி நடத்தை இருக்க முடியுமா?. பகைமையையும், கடவுளின் துணையால் வெல்லுங்கள் என்பது நமக்கு சொல்லித் தரும் பாடமாகும்” எனப் பேசினார்.