அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, இரண்டு வெற்றிக்குப் பிறகு இந்தக் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்தான் அதிமுக என்பதை உறுதி செய்து அதற்கு பிறகு நடக்கும் கூட்டம். ஒரு வாரம்தான், ஒரு மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும் என்று சொல்லி வந்தார்கள். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு பின்னர் நடக்கும் கூட்டம். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அனைவரும் திரும்பி பார்க்கின்றனர். 2021லும் அதிமுக ஆட்சி என்பதை அந்த வெற்றி சொல்கிறது.
ஏதோ ஒரு அதிசயத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். இந்த இயக்கத்திற்காக அவர் உழைத்த உழைப்பு என்ன என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன். திருமங்கலம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சேலம் புறநகர் மாவட்டத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பூத்தை ஒதுக்கியிருந்தார் ஜெயலலிதா. இருவரும் ஒன்றாகத்தான் தேர்தல் பணியாற்றினோம். மேலஉரப்பனூர், கீழ்உரப்பனூர், ஊராண்ட உருப்பனூர் பகுதிகளை ஒதுக்கியிருந்தார்கள். நாங்கள் இருவரும் 20 நாட்கள் ஒரு வீட்டில் ஒரே ஒரு அறை எடுத்து தங்கியிருந்து தேர்தல் பணிகளை பார்த்தோம்.
அந்த அறையில் பாய்தான் இருக்கும். அந்த பாயில்தான் படுப்போம். பத்து நாள் இருக்கும், திடீரென இரவு இரண்டு மணி இருக்கும், திமுககாரர்கள் சத்தம்போட்டுக் கொண்டு மேலே வருவதை பார்த்த எடப்பாடியார், மணி நாம் உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். பின்னர் நாங்கள் தவழ்ந்து சென்று ஜன்னல் வழியாக பார்த்தோம். 10 பேர் வந்துகொண்டிருக்கிறார்கள். இருப்பது ஒரே அறை, ஒரே கேட்டுதான் இருக்கிறது. தங்களை பாதுகாக்க என்ன இருக்கிறது என்றால் அந்த அறையில் ஒரே ஒரு தடிதான் இருந்தது. அதனை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தோம். விடிய விடிய உயிரை பணயம் வைத்து அன்றைய தினம் தேர்தல் பணியாற்றியவர்தான் எடப்பாடியார்.
ஜெயலலிதாவுக்கு பிறகு இந்த இயக்கத்திற்கு பாதுகாப்பு இருக்குமா. தொண்டர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்று நினைத்தவர்களுக்கு மத்தியில் இன்றைய தினம் நாம் வேட்டியை தைரியமாக கட்டி செல்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியும்தான்.
திடீரென முதலமைச்சரானார். அதிசயம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் எதிரி, இன்னொரு புறம் துரோகி என்பதை சமாளித்து அதற்கு மேலாக இந்த மூன்று ஆண்டு காலத்தில் இந்த ஆட்சியை எப்படியாவது வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று போராட்டங்கள் அதிகமாக நடந்தன. அனைத்தையும் நிர்வாகத் திறமை, ஆளுமை திறமை காரணமாக முறியடித்து காட்டியுள்ளார் எடப்பாடியார். இவ்வாறு பேசினார்.