திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புறவழிச்சாலையில், வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பரப்பரை மேற்க்கொண்டார்.
ஆம்பூர் புறவழிச்சாலையில் திறந்த காரில் பரப்புரை மேற்க்கொண்ட நடிகர் கமல்ஹாசன், “தமிழகத்தில் ஒரு அரசியல் திருப்புமுனை உள்ளது. இதை வழிநடத்த வேண்டிய கடமை உங்களுடையது. அதற்கு கருவியாக இருக்க வேண்டியது என்னுடைய கடமையுமாகும். ம.நீ.ம. மூன்று வயது குழந்தை. இது நடக்காது, காணாமல் போய்விடும் என்று விமர்சகர்கள் சொல்லச் சொல்ல நீங்கள் ம.நீ.ம. குழந்தையை வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். மேலும், என்னுடைய வேண்டுகோள் எல்லாம் இந்த மக்கள் எழுச்சியை, மாற்றமாக மாற்றிக்காட்ட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்.
ஊழலுக்கும் நேர்மையாளர்களுக்குமான போர் நடக்கிறது. இதில் நேர்மையின் பக்கம்தான் நீங்கள் நிற்க வேண்டும். அந்த நேர்மை என்கிற ஆயுதம் ம.நீ.ம. இங்கே வழக்கமாக அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆனால், நான் உங்களுடன் வாக்குறுதிகளைக் கேட்கிறேன். நேர்மையை ஆதரியுங்கள் ஏன் தெரியுமா, இங்கு வருகிறவர்கள் யாரும் பிரியாணி கொடுப்பார்கள் என்று வரவில்லை. இந்த மழையிலும் வெயிலிலும் காத்து நிற்பது நேர்மையாக தமிழகம் வாழ்வதற்கான வாய்ப்பாக உள்ளது என்று நம்பி வந்திருக்கும் கூட்டம். இந்த கூட்டம் ஏமாறாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் எல்லோரும் ம.நீ.ம. உறுப்பினர்களாக சேர்ந்துகொள்ள வேண்டும். நீங்களும் வடம் பிடித்து தேர் இழுத்தால்தான் நாளை நமது ஆகும்.
இதே இடத்தில் ஒரு ஸ்டால் அமைக்கச் சொல்கிறேன். அனைவரும் உறுப்பினராக சேர்ந்து விடுங்கள். அப்படி உறுப்பினராக சேர்ந்தீர்கள் என்றால் நண்பர்கள் கூட்டம் பெருகும், நேர்மையானவர்கள் கூட்டமும் பெருகும்.
ஆம்பூரில் உலகத் தரத்தில் குடிநீர் இல்லை என்று சொல்கிறார்கள். நீரின் டி.டீ.எஸ் அளவு 2500ஐ கடந்துள்ளது. அதனால் நீரை சுத்திகரிக்கும் ஆலை அமைத்து சரியாக பராமரித்தால் இந்தக் குறை நீங்க வாய்ப்புண்டு.
எங்கு பார்த்தாலும் சாக்கடை ஓடுகிறது, பின்பு எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்? அரசு மருத்துவமனையைச் சென்று பார்த்தால் அது சாக்கடையை விட மோசமாக உள்ளது. அவை எல்லாம் மாற வேண்டும். கல்வித் தரம் மாற வேண்டும். இதற்கெல்லாம் திட்டத்தோடு வந்திருக்கிறது ம.நீ.ம. அதனால் எங்களை ஆதரிக்க வேண்டும்” என்று பேசினார்.