நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சந்தேகங்களை போக்க வேண்டும். வாக்குப்பதிவின்போது ஒப்புகைச் சீட்டு வழங்கும் நடைமுறையில் குறைபாடுகள் உள்ளன. இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்தப்பட்ட நடைமுறையையே இந்த முறையும் பின்பற்ற வேண்டும். விவிபேட் (V.V.P.A.T.) இயந்திரத்தை பயன்படுத்தும் நடைமுறையை மாற்றுகின்றனர். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மின்னணு வாக்கு இந்திரங்கள் மீதான சந்தேகத்தைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை ஆகும்.
தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த புதிய நடைமுறையை மாற்ற வேண்டும். 17 சி விண்ணப்பம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள தகவல் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 2 சதவிதம் அளவிற்கு தவறு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்படும் இடங்களில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.