காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் 65 பேர் மற்றும் மாநில தலைவர்கள், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி நக்கீரன் இணையதளத்திடம் கூறுகையில், முதல் கட்ட கூட்டத்தில் சோனியாவும், ராகுலும் கலந்து கொண்டார்கள். புதிய தலைவர் தேர்வு செய்யும் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை, நீங்களே கலந்து முடிவு செய்யுங்கள். நாங்கள் முன்னாள் தவைலவர்கள். புதிய தலைவர் தேர்வு செய்யும் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டால், நாங்கள் தேர்வு செய்து எங்கள் சொல் பேச்சு கேட்பவராக இருப்பார் என்ற பெயர் வந்துவிடும். ஆகையால் தனித்தன்மையுடன் இயங்கக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். எனவே உங்களுக்குள்ளேயே கலந்து முடிவு செய்த புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் என்று கூறியுள்ளனர்.
மாநிலத் தலைவர்கள், காரிய கமிட்டி சீனியர்கள், ஜூனியர்கள், அகில இந்திய பொதுச்செயலாளர்கள், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் உள்பட ஐந்து குழுக்களாக ஆய்வு நடக்கிறது. புதிய தலைவரை தேர்வு செய்வது முறையாக நடக்கிறது. இன்று இரவுக்குள் பெரும்பாலும் அறிவித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
நேரு குடும்பத்தைத் தாண்டி ஒருவர் தலைவர் பொறுப்புக்கு வந்தால் அதனை காங்கிரஸ் சீனியர்கள் ஏற்பார்களா?
அதுகுறித்த ஆய்வுதான் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். புதிய தலைவர் தேர்ந்தெடுத்தப் பிறகு, அவர் அறிவிப்பின் பேரில் காங்கிரஸ் கட்சியில் கீழ் மட்டத்தில் இருந்து முறையான தேர்தல் நடக்கும் என்றார்.