Skip to main content

தீபாவளி தமிழர் பண்டிகையா, இல்லையா? - வானதி சீனிவாசன் சொல்வது என்ன?  

Published on 06/11/2018 | Edited on 06/11/2018

மத்திய பாஜக அரசுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் சளைக்காமல் பதில் அளிப்பவர் வானதி சீனிவாசன். பாஜக மாநில பொதுச்செயலாளரான வானதியிடம் தீபாவளி குறித்து சில கேள்விகள் வைத்தோம்... 
 

vanathi srinivasan



தீபாவளி தமிழர்கள் பண்டிகை இல்லை என்று ஒரு கோட்பாடு சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

விநாயகர் தமிழ் கடவுள் இல்லை, கிருஷ்ணர் தமிழ் கடவுள் இல்லை, விஷ்ணு தமிழ் கடவுள் இல்லை என புதிதாக ஒரு கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் உருவாக்குகிறார்கள். மகாபலிபுரத்தில் பல்லவர் காலத்தில் ஐந்து ரதம் வைத்திருக்கிறார்கள். அதில் கன்னி மூலையில் பாருங்கள், அந்தப் பாறையில் விநாயகர் இருக்கிறார். விநாயகர் இல்லாமல் தமிழருடைய வாழ்க்கை இல்லை.

அவதாரங்கள், தசாவதாரங்கள் எல்லா இடங்களிலும் தமிழர் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஒன்று. சிலப்பதிகாரத்தில் இருந்து எவ்வளவு தமிழ் இலக்கியங்களை எடுத்துக்கொண்டாலும் ஐந்து விதமாக தமிழர் வாழ்க்கையை பிரித்திருக்கிறார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. அதில் ஐந்து கடவுளில் ஒரு கடவுள் விஷ்ணு.
விஷ்ணு மாயோனை ஒரு கடவுளாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், தசாவதாரத்தையும் ஏற்றுக்கொள்வதாக இருக்கணும். சங்கத் தமிழ் இலக்கியங்களே மாயோனைப் பற்றி சொல்கிறது. தசாவதாரம் என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழர்களுடைய வாழ்வில் கலந்திருக்கிறது.

வட மாநிலத்திற்கும், தென் மாநிலத்திற்கும் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் உண்டு, பண்டிகை கொண்டாடும் முறைகளில் வேறுபாடு உண்டு. ஆனால் பண்டிகை என்பது இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒன்றுதான். பிரிவினை அரசியலுக்காக செய்யப்படக்கூடிய இந்த கருத்துக்களுக்கெல்லாம் எந்த விதத்திலும் மக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை பாதிக்காது. இது அரசியலுக்கான ஒரு கருத்து அவ்வளவுதான்.

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்திருக்கிறதே உச்ச நீதிமன்றம், அதைப்பற்றி?

தீபாவளி உற்சாகமான விழா, தீபாவளி என்றாலே பட்டாசுதான். உச்சநீதிமன்றம் நாடு முழுக்க உள்ள மக்களைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். டெல்லியில் உள்ள நிலைமையை மட்டும் பார்த்து சொல்லிவிட்டார்கள். குறிப்பிட்ட நேரத்துலதான் பட்டாசு வெடிக்கணுமுன்னு கோர்ட் சொல்லியிருக்குன்னு குழந்தைகளிடம் எப்படி சொல்லி புரிய வைக்கிறது என்று தெரியல. ஏன் கோர்ட் இப்படி சொல்றாங்க, வருஷத்துக்கு ஒருநாள்தானே வெடிக்கிறோமுன்னு குழந்தைகள் கேட்குறாங்க.

மாசு ஏற்படுது, அதனாலதான் கோர்ட்டு இப்படி சொல்லியிருக்கு, கோர்ட் தீர்ப்பை மதிக்கணும் என சொல்ல வேண்டியிருக்கு. கவர்மெண்ட் பஸ் புகை விடுது, எவ்வளவு கார், ஆட்டோ போகுது, அதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா? நாங்க வருஷத்துல ஒருநாள்தானே வெடிக்கிறோமுன்னு கேட்குறாங்க. சுற்றுச்சூழலை பற்றி நாம பேசினாலும், குழந்தைகளுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு.

 

 

சார்ந்த செய்திகள்