இடைத் தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதமே, தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக கட்சித் தலைமை. அந்த வகையில் விளாத்திகுளம் தொகுதிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பொறுப்பாளராகவும், கூடுதல் பொறுப்பாளராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவிக்கப்பட்டனர்.
அப்போது, விளாத்திகுளம் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ, “மணல் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு எல்லாம் தேர்தலில் ‘சீட்’ கிடையாது என மறைமுக மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை தாக்கினார். பதிலுக்கு கடம்பூர் ராஜூ தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் என்று எதிர்வினையாற்றினார்.
இதையடுத்து இருதரப்பையும் ஓபிஎஸ் சமாதானப்படுத்தினார். தொகுதியில் மார்க்கண்டேயனுக்கு தான் செல்வாக்கு என்பதால், அவருக்கு தான் இடைத் தேர்தலில் ‘சீட்’ என அப்போது பேசப்பட்டது. இருந்தாலும் தனது ஆதரவாளர் சின்னப்பனுக்கு ‘சீட்’ வாங்கிக் கொடுப்பதில் முனைப்பு காட்டினார் கடம்பூர் ராஜூ. இதையறிந்த மார்க்கண்டேயன், புதூர் கூட்டத்தில் சின்னப்பனை பேசவிடாமல் தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது, மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் முன்னிலையில் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதோடு, கட்சியின் மானத்தை காற்றில் பறக்கவிட்டனர். (இதனால் தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் மார்க்கண்டேயன் என அப்போதே நக்கீரன் இணையத்தில் எழுதியிருந்தோம்.) இந்த நிலையில், சின்னப்பனுக்கு சீட் வாங்கி கொடுத்து காரியத்தை சாதித்துவிட்டார் கடம்பூரார். இதனால், இன்று தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேரை விளாத்திகுளத்தில் கூட்டி ஆலோசனை நடத்தினார் மார்க்கண்டேயன்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கட்சியின் தலைமை தவறான முடிவை எடுத்திருக்கிறது. இதனால், எனது செய்திதொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கும் சின்னப்பனுக்குமான மோதல் அல்ல இது. எனக்கும் கடம்பூர் ராஜூவுக்கும் இடையேயான மோதல் இது. சின்னப்பன் 6 ஆயிரம் ஓட்டு வாங்கி தோற்பார். நாங்கள் 70 ஆயிரம் ஓட்டு வாங்கி ஜெயிக்கப்போறோம். இதுதான் நடக்கப் போகிறது” என்று தனது எண்ணப்பாட்டை வெளிப்படுத்தினார்.
அதேபோல், ஓபிஎஸ்ஐயும் ஒரு பிடி பிடித்தார். “ஆர்.கே.நகரில் நாங்களும் போட்டியிட்டோம், தினகரனும் போட்டியிட்டார். அங்க ஜெயிச்சது தினகரன். ஏன்னா அவர்(தினகரன்)ஆளுமை மிக்கவர். அம்மா இறந்தப்ப எங்களுக்கு பெரும் இழப்பு. அப்ப அந்த குடும்பம் (சசிகலா) அங்க இருந்துச்சு. அப்ப தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ் எங்களை எல்லாம் மிஸ்கைடு பண்ணிட்டார். அதனால், நாங்களும் அவங்க மேலே (சசிகலா குடும்பம்) சேற்றை வாரி இறைச்சிருக்கோம். ஆனால், எங்களுக்கே தெரியாமல் இவரு தினகரனை ரகசியமாக சந்திச்சார். அப்பத்தான் இவர் மேலே எங்களுக்கு சந்தேகம் வந்திடுச்சு. இனிமேல் எனக்கு கட்சித் தலைமை சீட் கொடுக்க முன்வந்தாலும், அதை ஏற்கும் மனநிலையில் இல்லை” என்றும் மார்க்கண்டேயன் தனது பேட்டியின்போது குறிப்பிட்டார்.
முன்னதாக மார்க்கண்டேயன் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலரை ஓரம்கட்டி பேசினோம். “இவரு பேசுறத வச்சி பார்க்கும்போது, நிச்சயம் அதிமுகவை எதிர்த்து போட்டியிடுவார் என்பது நல்லா தெரியுது. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருத்தர் பேரையும் சுட்டிக்காட்டி பேசி, அவங்களுக்கு செய்த உதவிகளையும், கட்சிக்காக 20 வருடமாக உழைத்ததையும் உருக்கமாக பேசினார்.
சீட் கேட்டு ஓபிஎஸ்ஐ பார்த்தேன். அவரு இபிஎஸ்ஐ பார்க்க சொன்னார். இபிஎஸ்யும் பார்த்தேன். அவரு கடம்பூர் ராஜூ ராஜினாமா பண்ணிடுவேன்னு மிரட்டுறார். அதனால் தான் சின்னப்பனுக்கு சீட் கொடுத்தேன் என்கிறார். டிடிவி தரப்பை பலமுறை நான் விமர்சித்து பேசி இருக்கிறேன். அதை இப்போது வாபஸ் வாங்கிக்கிறேன் என்றார். மேலும் அதிமுக-அமமுக விரைவில் ஒன்று சேரும் என்றார். எனவே, தினகரன் அணி சார்பில் மார்க்கண்டேயன் களம் இறங்குவது உறுதி” என்றார் அந்த நிர்வாகி.
ஆக.. அதிமுகவில் கலகம் பிறந்துவிட்டது. இது விளாத்திகுளம் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு மட்டுமல்ல, தூத்துக்குடியில் களம் இறங்கும் தமிழிசை(?)க்கும் சிக்கலை ஏற்படுத்தும்.!