Skip to main content

அடுத்தடுத்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய திமுக!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

TN ASSEMBLY ELECTION DMK ALLIANCE DISCUSSION

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

 

இந்த நிலையில், மற்ற கட்சிகளுடன் தி.மு.க. தலைமை தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித் தமிழர் பேரவை, அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 சட்டமன்றத் தொகுதியும், ஆதித் தமிழர் பேரவைக்கு 1 சட்டமன்றத் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளையும் ஒதுக்க தி.மு.க. முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில்,  தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 சட்டமன்றத் தொகுதியும்  ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் கருணாஸ் ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் எழுதியதாகவும், அதில் ஒரு சட்டமன்றத் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வலியுறுத்தியதாகவும் தி.மு.க. வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

 

இதனால், கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 190- க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் தி.மு.க. போட்டியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்