சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் நேற்று (02-02-24) சோதனையில் ஈடுபட்டனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா எனவும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா என்ற சந்தேகத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் மூலம் என்ஐஏ அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றிருந்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின் போது சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசியிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், பா.ஜ.க பிரமுகர் ஹெச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்தில் NIA வந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வரை தமிழக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? நா.த.க நிர்வாகிகள் இல்லத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. அவை யாருக்கு எதிராக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்தது என தெரிய வேண்டும். தமிழக காவல்துறை நாம் தமிழர் கட்சியினர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.