தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்களிடம் வாக்குச் சேகரித்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தேர்தல் அறிவிப்புக்குப் பிந்தையப் பிரச்சாரத்தை நாளை (03/03/2021) ஆலந்தூரில் இருந்து தொடங்குகிறார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மக்கள் நீதி மய்யம் கட்சி, வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி தமிழக அரசியல் கலாச்சாரத்தை மாற்றி புதிய விடியலை ஏற்படுத்த, தனது முதல் சட்டமன்றப் பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. அதன் பொருட்டு மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட கமல்ஹாசன் பரப்புரையை நாளை (03/03/2021) மாலை 04.00 மணிக்கு சென்னை ஆலந்தூரிலிருந்து துவங்குகிறார். தொடர்ந்து வேளச்சேரி, சைதாப்பேட்டை மற்றும் மயிலாப்பூரில் பரப்புரை மேற்கொள்கிறார். பிரச்சார முடிவில் மாலை 08.00 மணியளவில் மயிலை மாங்கொல்லையில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.