நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.
அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்ய நடைபெற்ற நேர்காணல் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (13.03.2024) நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “அ.தி.மு.க. - பா.ஜ.க.வுடன் கூட்டணி, அ.தி.மு.க. - பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை, பா.ஜ.க. - பா.ம.க. உடன் கூட்டணி குறித்து பேசுகிறது என ஊடகங்கள் கூறுவதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. கூட்டணி குறித்து பேசும் போது ஊடகங்களை அழைத்து தெரிவிப்போம். தே.மு.தி.க.வுடன் கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறோம். பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் ஊடகங்ளுக்கு நிச்சயம் தெரியப்படுத்துவோம். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்பவர்கள் விலாசம் தெரியாமல் போவார்கள்” எனத் தெரிவித்தார்.