அதிமுகவின் செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாசலம், அதிமுக தொண்டர்கள் சோர்ந்துபோய் உள்ளனர். எம்எல்ஏக்கள், ஒன்றிய செயலாளர்கள் பரிந்துரைகள் எதையும் அமைச்சர்கள் செய்து கொடுப்பதில்லை. அவர்களுக்கு வேண்டியதை மட்டுமே செய்து கொள்கின்றனர் என பேசியதும், கூட்டத்தில் இருந்தவர்கள் அவரது பேச்சை வரவேற்று கைதட்டினர்.
அவருக்கு ஆதரவாக ராஜன் செல்லப்பா, ஜக்கையன் ஆகியோரும் எழுந்து கட்சிக்காரர்களுக்கு மரியாதை இல்லை, ஜெயலலிதா இருந்தபோது ஒவ்வொரு ஒன்றிய செயலாளருக்கும் மெடிக்கல் சீட் வாங்கி தருவார் என்றதும், உடனே அவர்களை எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சமாதானப்படுத்தினர்.
இதுதொடர்பாக செயற்குழுவில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தபோது, எடப்பாடி முதல் அமைச்சரானபோதே, தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று செங்கோட்டையனும், தோப்பு வெங்கடாசலமும் திவாகரனிடம் கூறியுள்ளனர். திவாகரன் இருவருக்காகவும் பேசியுள்ளார். ஆனால் செங்கோட்டையன் மட்டும் மந்திரியானார். தோப்பு தனிமரமானார். அதோடு தோப்பு மாவட்டத்தை சேர்ந்த கருப்பண்ணன் மந்திரியானார்.
மந்திரி பதவி கிடைக்கவில்லை, தான் கொடுக்கும் பரிந்துரைகளையும் கண்டுகொள்ளவில்லை என்பதால் வெறுத்துப்போன தோப்பு வெங்கடாசலம் செயற்குழுவில் இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என வந்துள்ளார்.