ஐஐடி உட்பட அனைத்துக் கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15ம் தேதி அன்று திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழிலே எழுதத் தெரியாத தமிழர்களை உருவாக்கி இருக்கின்ற ஒரு ஆட்சி திராவிட மாடல். வெறும் பேசும் மொழியாக தமிழை ஆக்கி இருக்கின்ற சக்தி இந்த திராவிட இயக்கங்கள். ஆனால் அதற்கு மாறாக பிரதமர் எங்கு போனாலும் தமிழ் மொழி பற்றிய பெருமைகளை எடுத்துச் சொல்கிறார்.
தமிழின் பெருமைகளை உணர்ந்த அரசாங்கத்தினை எதிர்க்கிறேன் என்று மக்களை மற்ற விஷயங்களில் இருந்து மறக்கடிக்க இதை கைகளில் எடுத்துள்ளனர். நல்லது. ஏனெனில் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். மத்திய அரசாங்கம் தேசியக் கல்விக்கொள்கையில் தெளிவாக சொல்லியுள்ளது. முதல் முன்னுரிமை மாநில மொழிக்குத்தான். அடுத்து ஆங்கிலம் அதற்கடுத்துதான் இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழி. சமூக நீதி, நாளுக்கு நாள் வளர்வது பிரதமர் மோடியின் காலத்தில் தான்.