Published on 28/08/2021 | Edited on 28/08/2021
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13ஆம் தேதி பொது பட்ஜெட்டும் அதற்கடுத்த நாளான 14ஆம் தேதி வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
நேற்று (27/8/2021) சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தொடக்க நாளிலேயே ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதேபோல் அமைச்சர்களுக்கும் எனது கண்டிப்பான வேண்டுகோள். நீங்கள் பதிலளிக்கும் நேரத்தில் உங்களது உரைகளில் உங்களை ஆளாக்கிய, உங்களை உருவாக்கிய நம்முடைய முன்னோடிகளின் பெயர்களை குறிப்பிட்டு வணக்கம் செலுத்தி பேசுவது முறை. பதில் அளித்து பேசுவதற்கு கூட சில வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கேள்வி நேரத்திற்கும் பயன்படுத்தக்கூடாது. அதேபோல் சட்டமுன்வரைவை அறிமுகப்படுத்தும் போதும் பயன்படுத்த கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்க வேண்டும். இப்பொழுது சட்டத்துறை அமைச்சர் சட்டமுன்வடிவை அறிமுகம் செய்வதற்கு நேரடியாக சட்டமுன்வடிவு தொடர்பான பேச்சுக்கு வரவேண்டும். எனவே இதை ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இதுதான் என் கட்டளை. இதுதான் இங்குள்ள அமைச்சர்களுக்கும், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் என்னுடைய கட்டளை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று (28/8/2021) திமுக எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ''மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் என்னை புகழ்ந்து பேசினால் திமுக எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்னை புகழ்ந்து பேச வேண்டாம்'' எனக்கூறிய மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏ ஐயப்பன் புகழ்ந்து பேசியதால் எச்சரிக்கை விடுத்துள்ளார். ''கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் மீது நடவடிக்கை எடுப்பேன்'' எனவும் பேசி முடித்தார்.
அதேபோல் ''எதையும் லிமிட்டாக வைத்துக் கொள்ளுங்கள். நேரத்தின் அருமை கருதி மானிய கோரிக்கை விவாதத்தில் என்னைப் பற்றிப் பேசுவதை தவிர்க்க வேண்டும். நேற்றே இதுதொடர்பாக கட்டளையிட்டேன்'' என இன்றும் எச்சரித்துள்ளார்.