சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் பட்டாபிராம் பகுதியில் கல்லூரி பணியாளர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்தும் சோதனையானது நடைபெற்று வருகிறது. காலை 6:30 மணி முதல் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகாரில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் புதுச்சேரியில் அகரம் பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சுமார் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்துவது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது. விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதற்கு இதுவே எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசின் அமைப்புகள் ஏவி விடப்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே நடவடிக்கை எடுப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். அமலாக்கத்துறை நியாயமாக வெளிப்படைத்தன்மையாக செயல்பட வேண்டும் என அண்மையில்தான் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை வசதியாக மறந்துவிட்டு பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் பாஜக ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு பாஜக அச்சம் அடைந்திருப்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. எதிர்க்கட்சியினரை குறி வைத்து விசாரணை நடத்துவதை இதோடு பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.