பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய், 2021இல் 2 ஆயிரத்து 500 ரூபாய், 2022ல் ஆயிரம் ரூபாய், கடந்த 2023இல் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. ரொக்கமும் சேர்த்து வழங்கப்பட்டதால் கடந்த ஆண்டுகளில், அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. ரொக்க பணம் வழங்கப்படவில்லை. மொத்தம் 2.21 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வாங்கவில்லை. இதன் மூலம் திமுக ஆட்சியில் பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
அரசு சார்பில் கொடுத்த அரிசியும், சர்க்கரையும் எடை குறைவாக வழங்கப்பட்டதாகவும், திமுக அரசு சொன்ன வாக்குறுதிப்படி ரொக்கப் பணம் கொடுக்காததாலும், தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பைப் புறக்கணிப்பதைப் போல, வெகு விரைவில் 2026ல் இந்த ஆட்சியையும் புறக்கணிப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அரசின் மீது அதிருப்தியால் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.