முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி சென்று ஓய்வெடுத்துவந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயான், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்தப் புகாரை தற்போது காவல்துறையினர் கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையை அதிமுக புறக்கணித்திருக்கும் நிலையில், கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநரை இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் சந்தித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக பொய் வழக்கு போடுவதாக இந்தச் சந்திப்பில் ஆளுநரிடம் முறையிட்டு மனு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இபிஎஸ், ''கொடநாடு கொலை வழக்கில் சயானிடம் விசாரணை நடத்த எந்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது என்பதை முதல்வர் விளக்க வேண்டும். உண்மையான குற்றவாளியைப் பிடிக்க வேண்டும் என்றால், இதுவரை பிடித்தது போலி குற்றவாளியா?'' என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், கொடநாடு விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லையெனில் இபிஎஸ் - ஓபிஎஸ் ஏன் பதற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னர் நடந்த விசாரணையில் தவறு இருப்பதாக அரசு கருதினால் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என திருமா தெரிவித்துள்ளார்.