சென்னையில் நடைபெற்ற தி.மு.க. சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு இன்று (18.01.2025) காலையில் தொடங்கியது. இந்த மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, பொன்முடி, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ, கிரிராஜன் எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு இந்த மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளை புறக்கணிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொறுப்பற்ற வகையில் வதந்திகளைப் பரப்பி வருவதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்.எஸ். பாரதி இந்த மாநாட்டில் பேசுகையில், “திமுக மாநாடு நடத்தினால் அடுத்துவரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெறும் என்பதுதான் கடந்தகால வரலாறு. அதேபோல் இந்த மாநாட்டிற்குப் பிறகு, வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுகழகம் வெல்லப்போவது உறுதி” எனப் பேசினார்.
- படங்கள் : எஸ்.பி.சுந்தர்