நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன் வேலூர் தேர்தலில் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தினகரனிடம் இருந்து நீங்க பணத்தை எடுத்துட்டு போய்ட்டதா சொல்ராங்களே என்று தனியார் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டதற்கு, பாராளுமன்றத் தேர்தலில் எத்தனை கோடிகள் எனக்கு கொடுத்தார்கள்.
கணக்கு கொடுத்தால் நானும் கணக்கு கொடுக்கிறேன். எத்தனை கோடி செலவுக்கு கொடுத்தீங்க. அதில் எத்தனை கோடி நான் எடுத்துக்கொண்டு போனேன் என்பதை கரெக்டா கணக்கு கொடுத்தால், நானும் கணக்கு கொடுக்கிறேன். இல்லன்னா நீங்க எவ்வளவு கொடுத்தீங்க. எவ்வளவு செலவு செஞ்சேன் என்ற தெளிவான கணக்கை மீடியாக்கிட்ட சொல்கிறேன் என்றார். இருந்தாலும் செந்தில்பாலாஜி, இசக்கி சுப்பையாவை விட தங்கதமிழ்செல்வனை தினகரன் கட்சியினர் அதிகம் விமர்சித்து வருகின்றனர். தங்கத்தமிழ்செல்வனை அதிகம் விமர்சிப்பது பற்றி விசாரித்த போது, அரசியலில் தங்க தமிழ்செல்வன் வளர்வதற்கு முக்கியமாக இருந்தவர் தினகரன், அவரை பற்றி அதிகமாக தங்க தமிழ்செல்வன் விமர்சித்து பேட்டி கொடுப்பதால், அவர்களும் அதிகமாக விமர்சித்து வருகின்றனர் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.