சேலம் மாவட்டம், ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் நடந்த அ.தி.மு.க. கட்சியின் மகளிர் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, "கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உதவி செய்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 82,000 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 8,000 கோடிதான் ஒதுக்கினார்கள்.
மனுக்களை வாங்குகிறோம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். தி.மு.க.வின் சாயம் வெளுத்துவிட்டது; மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஓடோடி வரக்கூடிய பழனிசாமியாக இருப்பேன். தி.மு.க.வின் தில்லுமுல்லுகளைத் தகர்த்தெறிந்து அ.தி.மு.க. வெற்றிபெற மகளிர் பாடுபட வேண்டும். நினைத்ததைச் சாதிக்கக் கூடிய திறமை கொண்டவர்கள் பெண்கள். நீங்கள் ஆணையிட்டால் அதைச் செய்யக்கூடிய முதல்வராக இருப்பேன். தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. வீடு இல்லாத ஏழை மக்களுக்கு, அரசின் செலவில் இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்" என்றார்.