Skip to main content

“தமிழக பொறுப்பாளர்கள் எதுவும் செய்யவில்லை; ஏதாவது செய்துவிட்டு வாக்கு கேளுங்கள்” - கே.எஸ்.அழகிரி

Published on 11/06/2023 | Edited on 12/06/2023

 

“Tamil officials did nothing; Do something and ask for votes” - KS Alagiri

 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசு என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது அப்பட்டமான பொய் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசாங்கம் என தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய். மன்மோகன் சிங் போன்ற நேர்மையான நியாயமான பிரதமராக ஒரு காலத்திலும் மோடி இருக்க முடியாது. அவர் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. நீதி விசாரணையும் கிடையாது. 2ஜி வழக்கு குற்றச்சாட்டில் அப்பாவியான ராஜா, கனிமொழி மீதும் அந்த குற்றத்தை சுமத்தினர். அன்றைக்கு அதிகாரியாக இருந்த ராய் தவறான புள்ளி விவரங்களை கொடுத்தார். ஆனால் அந்த குற்றச்சாட்டு மிக வேகமாகப் பரவி நாங்கள் ஆட்சியை இழந்தோம். சிபிஐ அந்த வழக்கை விசாரித்த போது அதன் நீதிபதி ஷைனி கூறுகையில், ‘நானும் 2 ஆண்டுகள் இந்த நீதிமன்றத்தை திறந்து வைத்து கொண்டு அமர்ந்திருக்கிறேன். 2ஜி வழக்கில் குற்றம் சுமத்தியவர்கள் ஏதாவது ஒரு ஆதாரத்தோடு வருவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று தள்ளுபடி செய்தார். இதில் ஒரு காங்கிரஸ் அரசாங்கம் வீழ்ந்தது. திமுக அங்கம் வகித்த அரசு வீழ்ந்தது. அப்பாவியான ராஜா, கனிமொழி குற்றம் சாட்டப்பட்டனர். வினோத் ராய் ஓய்வு பெற்ற பிறகு மத்திய அரசில் பெரும் பதவி வழங்கப்பட்டது. பழிவாங்குகிற நடவடிக்கை நடைபெற்றது. ஊழல் நிரூபிக்கப்படவில்லை.

 

மத்திய அரசு தமிழகத்திற்கு 9 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறது என்ற முதல்வர் கேள்விக்கு, நாங்கள் 58 ஆயிரம் கோடி ரூபாய் நெடுஞ்சாலைக்காக கொடுத்திருக்கிறோம் என அமித்ஷா பதில் சொல்லியுள்ளார். அது தவறானது. அது வழக்கமாக வழங்கப்படும் தொகை. ஒரு மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை எங்கெங்கு உள்ளதோ அதனுடைய மேம்பாட்டிற்காக பணிகளுக்காக வழங்கப்படும் தொகையாகும். 9 ஆண்டுகளில் புதிதாக எந்த திட்டத்திற்கும் நிதி வழங்கப்படவில்லை. பெங்களூர் - சென்னை அதி விரைவு ரயில் திட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அறிவிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் 10 எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைத்துள்ளார்கள். தமிழகத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் சாலை கூட அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் எங்களது ரயில்வே திட்டமான சென்னை - மகாபலிபுரம் - கடலூர் ரயில் திட்டம், திண்டிவனம் - செஞ்சி - நகரி புதிய ரயில்வே திட்டம், திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில்வே திட்டம் ஆகியவை அப்படியே நிறைவேற்றப்படாமல் உள்ளன. விருதுநகர் - மதுரை சாலை திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. ஆனால் 2 லட்சம் கோடிக்கு மும்பை - குஜராத் வழியாக தில்லி செல்லும் சாலை திட்டத்தை அமைத்துள்ளீர்கள். தமிழகத்திற்கு துரும்பு கூட செய்யவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகளாக கட்டடம் கட்டப்படவில்லை. ஆனால் தமிழகத்திற்கு வந்துள்ள அமித்ஷா தவறான தகவல்களை, உண்மைக்கு புறம்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

 

“Tamil officials did nothing; Do something and ask for votes” - KS Alagiri

 

ஒரு தமிழர் பிரதமாக வருவார் என்று சொல்லுகிறார். எங்களுக்கு அந்த ஆசை உண்டு. என்ன அண்ணாமலை அல்லது முருகனை பிரதமராக கொண்டுவரப் போகிறீர்களா? இதை நாளைக்கு செய்யலாமே. யாரை கொண்டு வருகிறீர்கள் எனச் சொல்லுங்கள் நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. இதைவிட அப்பட்டமான பொய் காமராஜர், மூப்பனார் பிரதமராக வருவதை திமுக தடுத்ததாகக் கூறியுள்ளது. காமராஜர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட விரும்பாமல் இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரை பிரதமராக்கினார். தற்போது கருணாநிதி, முரசொலி மாறன் உயிரோடு இல்லை. ஆனால் அப்போது கருணாநிதி மாறனை அனுப்பி மூப்பனாரிடம் பிரதமர் பதவி விருப்பம் குறித்து கேட்ட போது, அதற்கு மூப்பனார் கடுமையாக மறுத்துவிட்டார். லாலுபிரசாத் யாதவ் நேரடியாக மூப்பனாரிடம் பேசிய போது பிரதமர் பதவி வேண்டாம் என மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். எனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா பொய் சொல்லக்கூடாது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றியடையும் எனக் கூறுகிறார். தமிழகத்தில் பலமான இயக்கமாக அதிமுக இருந்த போது கூட்டணி வைத்து 4 தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்தது. தற்போது தமிழகத்திற்கு 25 தொகுதியில் வெற்றி பெற இடமில்லை. தமிழக பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஏதாவது செய்துவிட்டு வந்து வாக்கு கேளுங்கள்.

 

“Tamil officials did nothing; Do something and ask for votes” - KS Alagiri

 

வெளிநாட்டில் சென்று ராகுல் காந்தி இந்தியாவை விமர்சிக்கவில்லை. செய்தியாளர்கள் மோடியை பற்றி கேட்ட போது மோடியைத்தான் விமர்சித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு ராகுல் காந்திக்கு அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இலக்கு. யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இந்தியாவில் மதச்சார்பற்ற அணியின் முன்னணி தலைவராக உள்ளார். எனவே ஸ்டாலினை குறி வைத்து அவரது ஆட்சியில் ஊழல் நடைபெறுகிறது எனக் கூறுகின்றனர். ஸ்டாலினை அப்புறப்படுத்தும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடப்பட்டு பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுவன் 2 இஸ்லாமியர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது” என்றார்.

 

பேட்டியின் போது  கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.வி.செந்தில்நாதன், நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணை தலைவர் ராஜா.சம்பத் குமார், நகர செயல் தலைவர் தில்லை கோ.குமார்,  மாவட்ட செயலாளர் ஆர்.வி.சின்ராஜ், ஆர்.சம்பந்த மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்