ஈரோடு இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இரண்டாவது கட்சியாக தேமுதிகவும் மூன்றாவது கட்சியாக அமமுகவும் வேட்பாளரை அறிவித்தன. தொடர்ந்து நான்காவது கட்சியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தது.
நேற்று பாஜக சார்பில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக துணைத்தலைவர் நாராயண் திருப்பதி ஈரோடு இடைத்தேர்தல் குறித்தான பாஜக முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக இபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அல்லது பொதுச்செயலாளர்களை சந்தித்து ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும் இந்த ஆலோசனையில் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் எடுத்துரைத்து விவாதிப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் விரிவாக ஆலோசனைகள் நடத்தி நாளை தமிழக பாஜக விரிவாக தனது அறிவிப்பை வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.