‘அந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை என்ற முடிவுக்கு ஆளுநர் எங்கிருந்து வருகிறார்’ என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஏற்கனவே இருக்கும் பிரச்சனையை வேறுவடிவில் மீண்டும் வலியுறுத்துகிறாரோ என்ற சந்தேகம்தான் ஆளுநர் கொடுத்த அறிக்கையைப் படித்துப் பார்க்கும்பொழுது தோன்றுகிறது. தமிழகம் என்று, தான் சொன்னதற்கு ஒரு காரணத்தை அவர் விளக்கி இருக்கிறார். அதில், முதல் விஷயமாக அந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை என்று ஒரு கருத்தாக்கத்தை அவர் சொல்கிறார். இந்த முடிவுக்கு அவர் எங்கிருந்து வருகிறார் என்ற கேள்வி இருக்கிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து தமிழ்நாடு இருக்கிறது என்பதை வரலாற்றுக்காலம் முழுவதும் எழுதப்பட்ட ஆதாரங்கள் கூறுகின்றன. இதை ஏன் அவர் மறுக்க வேண்டும். இதனை மறுப்பதன் மூலம் அவர் தொடர்ச்சியாக ஏற்கனவே வலியுறுத்தி வந்ததைத்தான், இந்த விளக்க அறிக்கையில் வேறுவிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அது மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இருக்கிற உறவைச் சொல்கிற போது, நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று அவர் சொல்லுகிறார். அவர் பேசியது மட்டுமல்ல, பொங்கல் விழாவிற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தை இல்லை. தமிழ்நாடு அரசின் லச்சினை இல்லை. திருவள்ளுவர் ஆண்டு என்பதை தமிழக அரசு 1970களில் இருந்து தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அந்த முறையைக் கைவிட்டு ஒரு அழைப்பிதழை ஆளுநர் மாளிகை தயாரிக்கிறது.
தமிழ்மொழிப் பண்பாடு, வரலாறு என அனைத்தையும் ஏதோ ஒரு வகையில் களங்கப்படுத்துகிற; நிராகரிக்கிற ஒரு அரசியல் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சி தான் ஆளுநர் பேசி வருவதும்; எழுதி வருவதும்” எனக் கூறினார்.