தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2- வது அமர்வு மார்ச் 8- ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், பட்ஜெட் மானியக்குழு கூட்டத் தொடரில் 110 விதியின்கீழ் நிறைய அறிவிப்புகளை எடப்பாடி வெளியிட்டுள்ளார். மேலும் அரசியல் ஆலோசனை கொடுப்பதில் மு.க.ஸ்டாலினுக்கு பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் என்றால், எடப்பாடிக்கு பெங்களூரு டீம்தான் தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என்று கூறுகின்றனர். ராஜ்யசபா சீட் உள்பட பலவற்றிலும் அ.தி.மு.க.வில் உரிய முக்கியத்துவம் இல்லை என்கின்ற ஆதங்கம் நாடார் சமூகத்துக்கு இருப்பதால், பனைத் தொழிலாளர்களுக்கு இனிப்பு தரும் செய்தியாக, ரேசனில் இனி சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி வழங்கப்படும் என்று 110விதியின்கீழ் எடப்பாடி அறிவித்ததும் பெங்களூரு டீம் வியூகம் தான் காரணம் என்று சொல்கின்றனர். துப்புரவுத் தொழிலாளர்களைத் தூய்மை தொழிலாளர்கள் என்று அறிவித்தது, அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கே முன்னுரிமை எல்லாமும் அதே டீமின் ஐடியா தான் என்று கூறுகின்றனர்.