சென்னை ராயப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (07/03/2021) நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 117 சட்டமன்றத் தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை திருவொற்றிர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். அதேபோல், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஸ்ரீரத்னாவும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் பிரேம்சந்தரும் போட்டியிடுகின்றனர்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "அரசு ஊழியர்கள், அமைச்சர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்க சட்டம் இயற்றுவோம். அரசுப் பள்ளி, கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் வரும் சூழலை வென்றெடுப்போம். நாம் தமிழர் ஆட்சியில் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கினால் அடுத்த நாளே ராஜினாமா செய்வேன். வரலாறு நமக்கு வழிகாட்டுகிறது; தொடர்ந்து பயணிப்போம். நாங்கள் விரும்பும் மாற்றத்தை எங்களிடம் இருந்து தொடங்குகிறோம். இது ரத்தம் சிந்தாத அரசியல் போர். தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க விரும்பவில்லை. நாம் தமிழர் ஆட்சிச் செய்தால், இப்படியொரு ஆட்சியை நாம் கொடுக்கவில்லையே என இந்தியா திரும்பிப் பார்க்கும். படித்தவர்களும் விவசாயம் செய்ய வேண்டும்; 60 வயதுக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். விவசாயி வாழ்ந்தால் நாடு வாழும்; விவசாயி செத்தால், அது நாடல்ல; சுடுகாடு" என்றார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே கட்டமாக அறிவித்த முதல் கட்சி நாம் தமிழர் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.