தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் அதன் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. ஒருபுறம் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சியின் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரத்துவருகிறார்கள். அதேவேளையில் மறுபுறம் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனக் கூட்டணி அரசியலும் பரபரக்கிறது.
‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்பது 2016 சட்டமன்றத் தேர்தலில், பா.ம.கவின் முழக்கமாக இருந்தது. இந்தத் தேர்தலில், அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அத்தேர்தலை சந்தித்தது. இத்தேர்தலில் அக்கட்சியின் சார்பாக அன்புமணி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் நின்று தோற்றுப்போனார். அதனைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து, தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகக் களமிறங்கினார் அன்புமணி. ஆனால், அதிலும் தோல்வியைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவைத் தெரிவித்தது பா.ம.க. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின்படி அதிமுக ஒரு ராஜ்ய சபா சீட்டை பா.ம.கவிற்கு ஒதுக்கியது. அதனைப் பயன்படுத்திய பாமக, அன்புமணி ராமதாசை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கியது.
தற்போது நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாமக கூட்டணி தொடர்கிறது. இதில், 23 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பெற்றுள்ளது பாமக. இந்தத் தேர்தலிலும் அன்புமணி ராமதாஸ் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால், பாமக நிர்வாகிகள் அதன் தலைமையிடம், தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில், மாநில அரசில் மாற்றம்கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அப்படி மாற்றம் ஏற்பட்டாலும் நாம் வலுமையாக இருக்க மத்திய அரசுடன் தொடர்பில் இருக்கவேண்டும். அதனால், அன்புமணி ராஜ்யசபா உறுப்பினராகவே தொடரட்டும். அதற்குப் பதிலாக நாம் இங்கு சௌமியா அன்புமணியை களமிறக்குவோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனைத் தலைமை பரிசீலித்துவருகிறதாம். அதேபோல் பாமகவின் வேட்பாளர் தேர்வுக் குழுவும் சௌமியா அன்புமணிக்கு சென்னையில் ஒரு இடத்தை ஒதுக்க திட்டமிட்டு அவரது பெயரை வேட்பாளர் தேர்வுப் பட்டியலில் இணைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.