Skip to main content

“இந்த ஸ்டாலினுக்கும் புதுச்சேரியின் மீது பாசம் தான்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

"This Stalin also has affection for Puducherry" - CM Stalin's speech

 

கலைஞர் ‘குடியரசு’ வார இதழில் ஆசிரியராகவும், பெரியாரோடு பழகுவதற்கும் புதிய பாதை தந்தது புதுவைதான் என கலைஞர் குறித்த சில சுவாரசிய நிகழ்வுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.  

 

புதுச்சேரி மாநிலம் பட்டனூரில் புதுச்சேரி திமுக அவைத்தலைவர் சிவக்குமாரின் குடும்ப திருமண நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மேடையில் பேசுகையில், ''சிவக்குமார் வெறும் செயல்வீரர் மட்டுமல்ல. எப்பொழுதுமே எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெளிப்படையாக பேசக்கூடிய ஒருவர் சிவகுமார். அதனை நீங்களும் அறிவீர்கள். நானும் அறிவேன். கலைஞரை ஒருமுறை ஒரு கல்லூரியின் சிறப்புப் பேச்சாளராக பேச வைப்பதற்காக அழைத்திருக்கிறார். கலைஞரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

 

அந்த நிகழ்ச்சியில் சிவக்குமார் பேசுகின்ற போது கலைஞரைப் பார்த்து ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். வேண்டுகோள் என்று கூட சொல்ல மாட்டேன், ஒரு கட்டளை. என்னவென்றால், நீங்கள் நீண்ட நேரம் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கட்சித்தலைவருக்கு இப்படிக் கட்டளை இடலாமா என்று அந்தக் கூட்டத்தில் ஒருவர் பேசியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய கலைஞர் 'இளங்கன்று பயமறியாது என்பதை போல சிவகுமார் பேசியிருக்கிறார். சிவகுமாரைப் போன்ற இளைஞர்கள் கட்டளையிடவும், என்னை போன்றவர்கள் அதை நிறைவேற்றவும் காத்துக் கொண்டிருக்கிறோம்' என்று கலைஞர் அப்பொழுதே குறிப்பிட்டிருக்கிறார். எதற்குச் சொல்கிறேன் என்றால், அந்த அளவிற்கு துணிச்சல் மிக்கவர் சிவக்குமார்.

 

அவர் பொது வாழ்விற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு அவருக்கு மறக்காமல் வாழ்த்துச் செய்தியை நான் அனுப்பி இருந்தேன். அதில் நான் குறிப்பிட்டு இருந்தேன் 'திமுகவின் மாணவர் அணியின் பொறுப்பில் இருந்த காலத்திலிருந்து புதுச்சேரியில் இயக்கத்தை வளர்க்கக்கூடிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கலைஞரின் அன்பைப் பெற்றவர்; பேராசிரியரின் வாழ்த்தைப் பெற்றவர்; புதுவை மக்களுடைய நன்மதிப்பை, ஆதரவைப் பெற்றவர்' என்று நான் பாராட்டியிருந்தேன். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்ற காரணத்தால் திராவிட இயக்கத்தின் இலக்கியத் தலைநகர் என்று சொல்லத்தக்க பெரும் புகழைக் கொண்டது இந்த புதுச்சேரி.

 

கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் அவர் பயின்று வளர்ந்தது குருகுலம் என்று அடிக்கடி சொன்னது ஈரோடு தான். அவர் கொள்கை உரம் பெற்ற ஊர் எது என்று கேட்டால் இந்த புதுச்சேரி தான். திராவிடக் கழகத்தின் பரப்புரை, பிரச்சாரம், நாடகம் என அவைகளை ஊர் ஊராகச் சென்று கலைஞர் நடத்தினார். அந்த நாடகத்தின் அரங்கேற்றம் எங்கே நடந்தது என்றால் இந்த புதுச்சேரியில் தான். அவர் நடத்திய நாடகம் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. காரணம், திடீரென்று ஒரு கலகக் கும்பல் உள்ளே புகுந்து அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள்.

 

அப்பொழுது கலைஞரை பலமாக தாக்கிவிட்டு சாக்கடையில் வீசி விட்டு போய்விட்டார்கள். பார்த்தவர்கள் எல்லாம் கலைஞர் இறந்து விட்டார்... இறந்துவிட்டார்... என்றுதான் நினைத்துக் கொண்டு போய் விட்டார்கள். அந்த அளவிற்கு தாக்கப்பட்டு கலைஞர் சாக்கடையில் விழுந்து கிடக்கிறார். மறுநாள் காலையில் தந்தை பெரியார் அதைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்து, கலைஞரைத் தூக்கி தனது மடியிலேயே வைத்து, மருந்து போட்டு, இனிமேல் நீ இங்கு இருக்க வேண்டாம். என்னோடு வா, என்று ஈரோட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். என்னுடைய குடியரசு என்ற வார இதழில் நீ துணை ஆசிரியராக பணியாற்று என்று பெரியார் கலைஞரிடத்தில் சொல்லிவிட்டார். எனவே கலைஞர் குடியரசு வார இதழில் ஆசிரியராகவும், பெரியாரோடு பழகுவதற்கும் புதிய பாதை தந்தது புதுவை தான். அவருக்கு மட்டுமல்ல அவருடைய மகனாக இருக்கக்கூடிய ஸ்டாலினுக்கும் புதுச்சேரியின் மீது பாசம் தான். அந்தக் கொள்கை உணர்வில்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்