
அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவானதற்குப் பிறகு, அதிமுகவின் முதல் செயற்குழு இன்று மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமையகத்தில் நடக்கும் இந்த செயற்குழுவில், திமுகவை கண்டிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதேசமயம் மத்திய அரசை பாராட்டும் தீர்மானங்களை நிறைவேற்ற எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். தீர்மானங்களை எழுதுபவர்களிடம் இதற்கான உத்தரவைப் எடப்பாடி பிறப்பித்துள்ளாராம்.
குறிப்பாக, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழகத்திற்கான 100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகையை விடுவிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திய நிலையில் ரூ.2,999 கோடி ரூபாயை விடுவித்த மத்திய அரசை பாராட்டி ஒரு தீர்மானம். அடுத்து, அதிமுக மற்றும் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
பகல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி, மற்றும் தேச நலனுக்காக இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக துணை நிற்கும் உள்ளிட்ட தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற இருப்பதாக கூறப்படுகிறது.