இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,"ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது என்றும், ஏப்ரல் 5- ஆம் தேதி ஞாயிறன்று இரவு 09.00 மணி முதல் 09.00 நிமிடங்கள் மின் விளக்குகளை அணையுங்கள்; பல்புகளை அணைத்து விட்டு வீட்டில் 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, அகல் விளக்குகளை ஏற்றுங்கள்; டார்ச் லைட் அல்லது செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்.9 நிமிடங்கள் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் கூறினார். இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், இந்த இக்கட்டான காலகட்டத்தில் எவ்வளவு நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது,மருத்துவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு கொடுக்கலாம் என்பதைப் பற்றி பேசாமல் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் விதமாகப் பிரதமர் மோடி பேசி வருகிறார், இதனை விஞ்ஞானிகள் கேட்டால் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைவார்கள் என்று விமர்சித்துள்ளார்.