சென்னையில் உள்ள மெட்ரோ நிலையத்திற்கு காமராஜர், ஆதித்தனார் பெயர் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வைத்திருக்கிறது தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கம். இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதியுள்ள இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சதீஷ்மோகன், "ஏழைகள் ஏற்றம் பெற, கல்வி செல்வத்தை நீக்கமற அனைவருக்கும் இலவசமாக கொடுத்து, கூடவே பசியாற உணவும் வழங்கி வலிமையான தமிழகத்திற்கு அடித்தளமிட்டவர் காமராஜர். தமிழகத்தை பாரதத்தின் முன்னோடி தொழில் மாநிலமாக வழிநடத்திய மக்கள் தலைவர்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் முதல் திருத்தம் கொண்டு வந்த பிதாமகன். தன் செயல்களால் பெருந்தலைவர் என இன்றுவரை போற்றப்படுகிறவர் ஐயா காமராஜர், சாமான்ய தமிழன் பொருளாதார வளமும், கல்வி ஞானமும் பெற்று பெருவாழ்வு பெற வித்திட்டவர்.
அதேபோல, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழில், செருப்பு செப்பனிடும் தொழிலாளியும், ரிக்சா ஓட்டும் பாமரனும், டேபிள் துடைக்கும் தினக்கூலியும் எழுத்து கூட்டி வாசிக்கவும், வாசித்ததை யோசிக்கவும் வைத்தவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார். அதனாலேயே தமிழர் தந்தை என போற்றப்படுபவர்.
உலக நிகழ்வுகளை பாமர தமிழனும் அறிந்திட உதவிய பத்திரிகை ஞானி அவர். நாடறிந்த நற்றமிழ் தலைவர் காமராஜர் பெயரை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரை எழும்பூர் மெட்ரோ நிலையத்திற்கும் சூட்டிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார் சதீஷ்மோகன்.