சட்டமன்றத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரும் என்று உத்தவ் தாக்கரே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசி உள்ளார்.
சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கு பின்னர் பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அஜித் பவார் 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த தகவல் உண்மையல்ல என அஜித் பவார் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மஹாராஷ்ட்ராவில் உள்ள ஜல்கான் மாவட்டம் பச்சோராவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, "மகாராஷ்டிராவில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். சிவசேனா கட்சிக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவை பார்த்தால் சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என்பதை நமது பக்கத்து நாடான பாகிஸ்தான் கூட சொல்லிவிடும். ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லை" பேசினார். இதற்கு முன்னதாக, "ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு இன்னும் 3 வாரத்திற்குள் கவிழ்ந்து விடும்" என்று உத்தவ் தாக்கரே ஆதரவாளரான சஞ்சய் ராவத் எம்.பி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.