தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (19/03/2021) பிற்பகல் 03.00 மணிக்கு நிறைவடைந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டம், ஈச்சனேரி அருகே தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "தொழில் வளம் செழிக்க, மாநில உரிமை காக்க, உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்ததும் கரோனா நிவாரணம் ரூபாய் 4,000, ஜூன் 3- ஆம் தேதி வழங்கப்படும். தி.மு.க. ஆட்சியில் அத்திக்கடவு- அவினாசி திட்டம் முனைப்போடு செயல்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 'பறக்கும் சாலை' அமைக்கப்படும். கலைஞர், ஜெயலலிதா இருந்த வரை நீட் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை. சிஏஏவிற்கு எதிராக தி.மு.க. குரல் கொடுத்தது; ஆதரித்து ஓட்டு போட்டது அ.தி.மு.க. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சிறுபான்மையின மக்களை ஏமாற்ற நினைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி" என்று குற்றம்சாட்டினார்.