அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகச் சிறையில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு திமுகவிலும், செந்தில் பாலாஜி தரப்பிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாமினில் வெளியே வரும் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்.
இது தொடர்பான ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுப்பட்டு வரும் நிலையில், அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உயர்வுடன் அவரது இலாகாவையும் மாற்றலாமா? என்கிற விவாதம் நடந்துள்ளது.
இது குறித்து கோட்டை வட்டாரங்களின் விசாரித்தபோது, “உதயநிதி தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சிறப்புத்திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். அவருக்குத் துணை முதல்வராக பதவி உயர்வளிக்கப்படும் போது, ஊரக வளர்ச்சித் துறையை அவருக்கு ஒதுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது பார்க்கும் துறைகளோடு கூடுதலாக ஊரக வளர்ச்சித்துறையை இணைக்கலாமா? அல்லது விளையாட்டு துறையை மட்டும் எடுத்துவிட்டு அதற்கு பதிலாக ஊரக வளர்ச்சியைச் சேர்க்கலாமா? என்கிற விவாதம் நடந்துள்ளது. அப்படி ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டால், இத்துறையின் தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வருவாய்த்துறை ஒதுக்கப்படலாம்.
அதேபோல, முதல்வர் ஸ்டாலின் மிகவும் எதிர்பார்த்த செந்தில் பாலாஜி, கண்டிசன் பெயிலில் வெளியே வருகிறார். அவரும் அமைச்சரவையில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படவிருக்கிறார். அவருக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை கொடுப்பதற்கும் ஸ்டாலின் ஆலோசித்திருக்கிறார்.
ஆனால், சில அதிகாரிகள், மின்சாரத் துறையின் அமைச்சராக இருந்தபோது அவருக்கு எதிராக சில வில்லங்கங்கள் இருக்கிறது. அதனால், சர்ச்சைக்குரிய அந்த துறையை அவருக்கு மீண்டும் ஒதுக்க வேண்டாம். ஒதுக்கினால் தேவையற்ற டென்சனை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் டென்சன் இல்லாத துறையை அவருக்கு கொடுக்கலாம் அல்லது டாஸ்மாக் துறையை மட்டும் ஒதுக்கலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆக, இப்படிப்பட்ட விவாதங்களும் ஆலோசனைகளும் நடந்துள்ளன " என்கிறது கோட்டை வட்டாரம்.