தமிழகம் முழுவதும் எடப்பாடிக்கு நெருக்கமான தரப்பு தான் மணல் குவாரி பிஸ்னஸை, லீகலாவும் இல்லீகலாவும் நடத்திக்கிட்டு இருப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டையில் பாறைகளில் இருந்து மணலைத் தயாரிக்கும் ’எம் சாண்ட் ’தொழிற்சாலையைத் தொடங்கியிருக்கார் அமைச்சர் விஜயபாஸ்கர். தங்களின் தயாரிப்புக்கு டிமாண்ட்டை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. உதாரணமாக அங்கிருக்கும் எஸ்.பி.அசோக் மூலம், ஆற்று மணலை எடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் எடப்பாடி கவனத்துக்குப் போனதால், விரைவில் எஸ்.பி.க்கு டிரான்ஸ்பர் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற செய்தியும் வெளிவருகிறது.

இப்படி பிஸ்னஸ் ரீதியாவும் தனக்கு நெருக்கடி கொடுத்த விஜயபாஸ்கர், டெல்லியின் ஆதரவை தக்க வைத்து கொள்ள எடப்பாடி கையாளும் டெக்னிக்கை அறிந்து, அதே பாணியில் அவரும் செயல்பட்டு வருவதை பார்த்து எடப்பாடி அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த டெக்னீக் பற்றி விசாரித்த போது, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை இந்தியா முழுவதும் தாமரையை மலர வைக்க, அமித்ஷா மேற்பார்வையில் நிதி மேலாண்மையில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதையெல்லாம் புரிந்து கொண்டு தான், தன் ஆட்சியைத் தக்க வைக்க முதல்வர் எடப்பாடி தனக்கு நம்பிக்கையான அமைச்சர்கள் மூலம் டெல்லிக்கு வேண்டியதை செய்து வருகிறார் என்று சொல்கின்றனர். சசிகலா தரப்பும், விரைவில் விடுதலையாவதற்காக டெல்லியுடன் இந்த ரூட்டில் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.

இந்த ஸ்பெஷல் ரூட்டை அறிந்த விஜய பாஸ்கர், அமித்ஷா மகனான ஜெய்ஷாவிடம், தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு , எம்.எல். ஏ.க்களின் ஆதரவு எனக்கும் இருக்கிறது. அதனால் என்னை முதல்வர் நாற்காலியில் அமர வையுங்கள் என்று கூறிவருவதாக சொல்லப்படுகிறது. அதற்காக நீங்கள் கேட்பதை செய்து தர தயார் என்று தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விபரமெல்லாம் எடப்பாடியின் கவனத்துக்கு உரியவர்கள் மூலம் வந்து சேர, ஹைவோல்ட் அதிர்ச்சிக்கு ஆளான அவர், விஜயபாஸ்கருக்காகத் திறக்கப்பட்ட டெல்லிக் கதவுகளை மூடும் முயற்சிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். மேலும் விரைவில் அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை மாற்றலாம் என்ற தீர்மானத்திற்கும் எடப்பாடி வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
