“தமிழகத்தில் உள்ள கடந்த கால வரலாற்றைப் பேச அமித் ஷாவிற்கு என்ன தகுதி இருக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழக வரலாற்றைப் பற்றி பேச அமித் ஷாவிற்கு என்ன தகுதி இருக்கிறது. வரும் 23 ஆம் தேதி அன்று அனைத்து எதிர்க்கட்சி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டத்தினால் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிடும்.
அந்தத் தேர்தலில் பாஜக தனிமைப்படுத்தப்பட்டு வீழ்த்தப்படத்தான் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே அவர்களுடைய பதவியே கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் தமிழர்களுக்கு பிரதமர் பதவி கொடுப்பதல்லாம் வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் பாஜக 25 தொகுதிகள் வெற்றி பெறும் என்று அமித் ஷா கூறுவது கற்பனைக்கு எட்டாத ஒன்று” என்று தெரிவித்தார்.