அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது திமுக மாவட்ட பொறுப்பாளர் ஆனபின்பு கரூர் திமுகவினரே பயங்கர உற்ச்சகாத்தில் இருக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக எம்.பி. தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணிக்காக கரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியான பிரச்சாரம் பயணம், தொடர் ஆலோசனை கூட்டம் என பிஸியாக இருந்தார் செந்தில்பாலாஜி. ஓட்டுப்பதிவு முடிந்த அடுத்த நாள் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தை காலையிலேயே தொடங்கிவிட்டார்.
கே.சி.பழனிசாமி, நன்னீயூர் ராஜேந்திரன், காங்கிரஸ் ஜோதிமணி ஆகியோருடன் அரவக்குறிச்சி பகுதியில் எல்லப்பநாயக்கன்பட்டி பெருமாள் கோவிலில் காலை வழிபாடு முடிந்தவுடன் நவமரத்துப்பட்டியில் பிரச்சாரத்தை துவக்கினார். பிரச்சாரத்தில் பேசிய செந்தில்பாலாஜி, ''வரும் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும். எடப்பாடி முதல்வர் பதவியிலிருந்து விலகுவார். இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் நமக்கு தான் விழுந்துள்ளது. இந்த பகுதிக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைப்பேன்'' எனறு பேசினார்.
தேர்தல் முடிந்து இன்னும் அதிமுக, அமமுக போன்ற கட்சிகள் வேட்பாளர் தேர்வில் இருக்கும் நிலையில் திமுக செந்தில்பாலாஜி வழக்கம் போல் எல்லோரையும் முந்தி பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.