நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து, விக்கிரவாண்டிக்கு படையெடுத்து வந்தனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், 'தங்கள் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என குறிப்பிட்டு பேசியிருந்தார். அதேபோல் ஊழல் கபடதாரிகளையும், பிளவுவாத சக்திகளாக செயல்படுபவர்களையும் தங்களுடைய எதிரிகள் என குறிப்பிட்டு பேசி இருந்தார்.
விஜய்யின் பேச்சு குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்து இன்று பேசினார். அப்போது விஜய்யின் மாநாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது. காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்திற்கு வந்த போது அதிகளவு கூட்டம் கூடியது. விஜய்யின் வருகை இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உதவியாகவே இருக்கும். கடந்த 2006ஆம் ஆண்டில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க காங்கிரஸ் பெருந்தன்மையோடு ஆதரவு தந்தது. அமைச்சரவையில் இல்லாமல் திமுக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்பதில் உறுதியாக உள்ளோம். டிசம்பர் 5ஆம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் கிராம கமிட்டிகள் சீரமைக்கப்படும். கிராம மக்களின் பிரச்சனைகளை கண்டறிய இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். காங்கிரஸில் மாவட்டங்களை பிரிக்க சொல்லி காங்கிரஸ் தலைமையுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று கூறினார்.