தமிழக நிதி அமைச்சரையும் உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றதும் பாராட்டுக்குரிய விஷயம் என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தின் 6 ஆவது அனைத்து இந்திய கபடி போட்டி மதுரையில் நடைபெற்றது. இதற்கான துவக்கவிழா மதுரையில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, “அகில இந்திய அளவில் நடக்கும் கபடி போட்டி மதுரையில் நடக்கிறது. கபடியில் அகில இந்திய அளவில் சிறந்து விளங்கிய 18 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 252 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் சிறந்து விளையாடும் வீரர்களைத் தேர்வு செய்து அவர்களை வைத்து அணியை உருவாக்கி அந்த அணி பிப்ரவரியில் ஈரானில் நடைபெறும் உலகக் கபடி போட்டியில் பங்கு கொள்வார்கள். இதற்கு உதவிய தமிழக நிதி அமைச்சரையும் பாராட்ட வேண்டும். அரசியல் வேறு, கட்சி வேறு, கொள்கை வேறு. விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள விளையாட்டுகளை இணைத்து ஜெயலலிதா முதலமைச்சர் கோப்பையை உருவாக்கினார்கள். அதற்காக நிதி ஒதுக்கினார்கள். அதே போல் பழனிசாமியும் விளையாட்டிற்கு 3% இட ஒதுக்கீடு கொடுத்தார்கள். அந்த வகையில் தற்போதைய அரசும் இப்பொழுது கூடுதலாக விளையாட்டுத் துறையில் கவனம் செலுத்துகிறது. அதற்காக ஒரு இளைஞனை விளையாட்டுத் துறை அமைச்சராக்கியுள்ளது உண்மையில் பாராட்டுக்குரியது. இதில் அரசியல் கலக்கக்கூடாது” எனக் கூறினார்.