தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே புதுச்சேரிக்கும் ஆந்திரா மாநிலத்தின் நெல்லூருக்கும் இடையே இன்று (17-10-24) கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையொட்டி, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேற்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பெய்து வந்தது.
அப்போது, சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்துள்ளது. அடுத்த 2 நாளுக்கு மழைப் பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். அனைத்து விதமான சாத்தியமான வழிகளை தமிழக அரசு செய்து வருகிறது. மழைப் பாதிப்புகளைத் தமிழக அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்” எனப் பாராட்டு தெரிவித்தார்.
தமிழக ஆளுநர், தமிழக அரசை பாராட்டி பேசியதை, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளையொட்டி , நேற்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு செல்லூர் ராஜு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, “தமிழக அரசும், ஆளுநரும் புது காதலர்கள் மாதிரி, கதாநாயகன் கதாநாயகி சந்திப்பது போல் உள்ளனர். நேற்று வரை நாங்கள் கவர்னர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்று சொன்னார்கள். ஆனால், முதலமைச்சர் உள்பட மூத்த அமைச்சர்கள் எல்லாரும் கலந்துகொண்டார்கள். அடுத்து, முதல்வர் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். சந்தித்து வந்த உடனேயே, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.7,500 கோடி ஒதுக்குகிறார்கள். இப்படி பல்வேறு சம்பவங்களை பார்க்கும் போது, தேன் நிலவு மாதிரி நடக்கிறது என்று நினைக்கிறேன். கவர்னர் எப்போதும், இந்த அரசாங்கத்தின் குறைகளை, மக்களின் பிரதிநிதியாக இருந்துகொண்டு சுட்டிக்காட்டினார். ஆனால், என்னவென்று தெரியவில்லை, அவர் தற்போது மாறி இருக்கிறார்” என்று கூறினார்.