நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் இந்த நிலையில், விசிகவிற்கு பானை சின்னம் கொடுக்க வேண்டும் என கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. முன்னதாக மதிமுகவும் பம்பரம் சின்னம் வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் மறுத்திருந்த நிலையில் தற்போது அண்மை செய்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்ட பானை சின்னம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின் போதே துரை வைகோ மூன்று சின்னங்களை வலியுறுத்தி இருந்தார். அதில் முதல் சின்னமாக பம்பரம் சின்னத்தையும், இரண்டாவதாக தீப்பெட்டி சின்னம், மூன்றாவதாக கேஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டிருந்தார். ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், மாற்று சின்னத்தை பெற மதிமுக முயன்று வருகிறது.
துரை வைகோ மாற்றாக கேட்டிருக்கும் தீப்பெட்டி சின்னத்தையும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கேட்டுள்ளார். மதிமுக அங்கீகாரம் இல்லாத கட்சியாக இருந்தாலும் பதிவுபெற்ற அரசியல் கட்சியாக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் தீப்பெட்டி சின்னம் கிடைக்கும் என மதிமுக வட்டாரம் எதிர்பார்த்து காத்துள்ளது.
அதேபோல சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருக்கும் விசிக இரண்டு தொகுதியில் போட்டியிடும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனைத் தவிர சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பானை சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் பானை சின்னம் கேட்டவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் போட்டியிடும் விசிகவின் வேட்பாளர் ரவிக்குமாரை தவிர வேறு யாரும் பானை சின்னம் கேட்காததால் விழுப்புரம் தொகுதிக்கும் பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
மதிமுகவுக்கு தற்போது கிடைக்கப் போவதாக இருக்கும் தீப்பெட்டி சின்னத்தை இதற்கு முன்பே நாம் தமிழர் கட்சி கேட்டிருந்ததாகவும், கிடைக்காமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.