கடந்த 19ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பள்ளி நிர்வாகம் மாணவியை மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டார் என சிறுமியின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாணவி பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோ எடுக்கப்பட்ட மொபைல் ஃபோன் நேற்று முன்தினம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், ''அரியலூர் மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அந்த குழந்தையினுடைய குடும்பத்திற்கு அரசாங்கம் தகுந்த முறையில் இழப்பீடு கொடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். இம்மாதிரியான பல்வேறு நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதால் தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். உண்மையான நியாயம், நீதியை இந்த வழக்கில் இவர்களால் கொடுக்க முடியாது அல்லது வேண்டுமென்றே அதை தவிர்க்கிறார்கள் என்பதற்காகத்தான் பாஜக இந்த கோரிக்கையை முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறது'' என்றார்.