ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஐ.ஐ.எம், மின்சார ரயில் சேவை உள்ளிட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று (20-02-24) திறந்து வைத்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்ததை தொடர்ந்து, மவுலானா பகுதியில் ஆசாத் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 32,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப்பிரதேசம், கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
227 ஏக்கர் பரப்பளவில், ரூ.1660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற எம்.பி.சு.வெங்கடேசன், பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர் ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர. தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா?” என்று குறிப்பிட்டுள்ளார்.