சசிகலா தமிழகம் வரவுள்ள நிலையில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவர் பிப்ரவரி 8- ஆம் தேதி (திங்கள்கிழமை) அன்று காலை 09.00 மணியளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழகம் வரும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, அதற்கான ஏற்பாடுகளை அ.ம.மு.க.வினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சசிகலாவை வரவேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் போஸ்டர் அடித்து ஒட்டி வருவது, அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்து ஒட்டிய நிர்வாகிகளை அ.தி.மு.க. தலைமை, கட்சியில் இருந்து நீக்கியது. ஆனாலும், பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இன்று (06/02/2021) பிற்பகலில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் மீது புகார் மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.