நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக, கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, பாமக திடீரென பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள தமாகா, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியுடன் பா.ஜ.கவுடன் நேற்று நள்ளிரவு நடத்திய பேச்சுவார்த்தையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் நடிகர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
பாஜக-சமத்துவ மக்கள் கட்சி இடையே விரைவில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று (13-02-24) புதிய அறிவிப்பாக தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை, சரத்குமார் பாஜகவுடன் இணைத்துள்ளார் காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக தெரிவித்துள்ள சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது கட்சியின் முடிவல்ல என்றும் இது மக்கள் பணிக்கான தொடக்கம் என விளக்கம் அளித்துள்ளார். பா.ஜ.க.வில் இணைந்த சரத்குமாரை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சரத்குமார் இன்று (13-03-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க.வில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்ததில் உறுதியாக இருக்கிறேன். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி, பிரதமராக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். பொருளாதார ரீதியிலும், இளைஞர்களை வழிநடத்துவதிலும், மூன்றாவது முறை பா.ஜ.க வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எங்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்திருக்கிறோம். பா.ஜ.க முன்னோடிகள் என்ன சொல்கிறார்களோ அதை செய்ய தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். இதனையடுத்து அவரிடம், ‘பா.ஜ.கவிடம் இருந்து உங்களுக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும்’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சரத்குமார், “நான் பொறுப்புக்காக வரவில்லை, பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வந்திருக்கிறேன்” என்று கூறினார்.
சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்த சரத்குமார், “என்னை பொறுத்தவரை யாரையும் தரக்குறைவாக பேசியது இல்லை. மனைவியிடம் கருத்து கேட்டதினால் என்னை விமர்சனம் செய்கின்றனர். மனைவியிடம் கருத்து கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்கள்?. இது மாதிரியான கருத்துகளுக்கு நான் செவிசாய்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்று பேசினார்.