மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் பகுதியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய அவர், “திமுக இந்த 2 ஆண்டுகளில் தோல்வி அடைந்தது தோல்வி அடைந்தது தான். அதில் இருந்து மீள எத்தனை அமைச்சரவை மாற்றம் ஏற்படுத்தினாலும் அது பலன் தராது. பிடிஆரை நிதித்துறையில் இருந்து மாற்றியுள்ளார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது. பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை 4 மாதத்தில் தருவதாக சொன்னார்கள். நிதி அமைச்சர் தான் அதற்கான ஏற்பாடுகளை செய்ததாக சொன்னார்கள். இப்போது அவரையே மாற்றிவிட்டார்கள்.
ஏழைகளுக்கு 1000 ரூபாய் கொடுங்கள் என்றால் தகுதி இருக்கிறதா என கேட்கிறார்கள். ஓட்டு கேட்டு வரும்போது என்ன தகுதியை எதிர்பார்த்தீர்கள். ஓட்டு கேட்டு வரும் பொழுது தகுதி உள்ள மக்களுக்கு ரூ.1000 என்று சொல்லி இருந்தால் உங்கள் தகுதி என்ன என்பதை நாட்டு மக்கள் காட்டி இருப்பார்கள். ஆனால் நீங்கள் அனைவருக்கும் ரூ.1000 தருவோம் என சொன்னீர்கள்.
தகுதி பார்த்து ஆயிரம் என இப்போது சொல்கிறார்கள். நீங்கள் கொடுத்துப் பாருங்கள். அதன் பின் கோட்டையில் இருக்க முடியாது. ஒரு இலையில் இட்லி வைத்துவிட்டு அடுத்த இலையில் இட்லி வைக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பது எங்களுக்கு தெரியும். பக்கத்து வீட்டில் ரூ.1000 கொடுத்துவிட்டு அடுத்த வீட்டில் பணம் இல்லை என்று சொன்னால் என் அக்கா விடுவார்களா? எங்க அக்காவுக்கு ரூ.1000 கொடுக்காமல் போய்விடுவீர்களா? இது என்ன அநியாயம்” எனக் கூறினார்.