"நீங்கள் இந்தியரா?" என விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழியிடம் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கேட்ட கேள்வியால், அதிர்ச்சி அடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கனிமொழி.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று விமான நிலையத்திற்குச் சென்றேன். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் போலீஸ், என்னிடம் இந்தியில் எதையோ சொன்னார்.
அதற்கு , நான், எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்றேன். உடனே அவர், நீங்கள் இந்தியரா? எனக் கேட்டார். உடனே நான் திடுக்கிட்டேன். இந்தி தெரிந்தால் போதும் அது இந்தியராக இருப்பதற்கு சமமா என்பதை அறிய விரும்புகிறேன் எனப் பதிவு செய்துள்ளார் கனிமொழி எம்.பி.!
தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் தொடர்பாக சி.ஐ.எஸ்.ஃஎப். அதிகாரியிடம் விசாரணை நடத்த சி.ஐ.எஸ்.ஃஎப். உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில், ''சென்னை விமானநிலையத்தில் கனிமொழி எம்.பி.க்கு நிகழ்ந்த மொழி ரீதியான அவமதிப்பு சாதாரணமானதல்ல. தமிழ் மட்டுமே அறிந்த சாதாரண குடிமக்கள் என்ன பாடு படவேண்டியிருக்கும்? தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு இடமில்லாமல், ஹிந்தி திணிக்கப்படுமென்றால் அது நிச்சயம் நமது தன்மானத்திற்கு விடப்படும் சவால்தான்'' எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.